Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் கைதில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

PRITHIVIRAJ27-03-2024
மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் கைதில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ள விவகாரத்தில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் அமலாக்கப்பிரிவு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 3ம் தேதி மீண்டும் இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த 21ம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கப் பிரிவு கைது செய்தது.

delhi hc.jpg

அமலாக்கப்பிரிவு கெஜ்ரிவாலைக் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 28ம் தேதிவரை அமலாக்கப்பிரிவு காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, தான் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ தேர்தல் நடக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வரை இதுபோல் கைது செய்வது,

அரசியலமைப்பு கட்டமைப்புக்கே எதிரானது. இந்த கைதுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஆதலால் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

365404-enforcement-directorate.jpg

அமலாக்கப்பிரிவு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ ஏராளமான முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. அவர்களின் நிலைப்பாட்டை அறிய காலஅவகாசம் தர வேண்டும் இடைக்கால நிவாரணத்துக்கு முன் முறைப்படி பதில் அளிக்க அவகாசம் தேவை” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்வர்ணகாந்த ஷர்மா “ மனுதாரர் தனது கைதுக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கப்பிரிவு வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்.

இந்த வழக்கு ஏப்ரல் 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். அமலாக்கப்பிரிவு விளக்கத்தை டிஜிட்டல் காப்பியாகவும், ஆவணமாகவும் மனுதாரருக்கு வழங்கவேண்டும்” என உத்தரவிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்