Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பத்திரிகையாளர்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையை காக்கும் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

KARTHICK GOVINDHARAJAN27-03-2024
பத்திரிகையாளர்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையை காக்கும் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

ஜி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு எதிராக ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் பதிவு செய்த கட்டுரையை நீக்க உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் வாதத்தைக் கேட்டு விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்பினரை கேட்காமல், நீதிமன்றம் ஒரு செய்தி கட்டுரையை நீக்குவது எழுதுபவரின் பேச்சுரிமை மற்றும் செய்திகளை தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வழக்கின் முழு விவரம்

கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று ஜி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு எதிராக ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் தனது வலைதளத்தில் ஒரு கட்டுரையை பதிவு செய்தது. அதில், சுமார் 241 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஜி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் முறைகேடு செய்ததை SEBI கண்டறிந்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ள இந்த கட்டுரையை நீக்கக் கோரி ஜி எண்டெர்டெயின்மெண்ட் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம், ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவிடப்பட்ட கட்டுரையை உடனடியாக நீக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. எனினும், விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். இதனை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அனைத்து தரப்பினரையும் கேட்காமல் ஒருதலைபட்சமாக கட்டுரையை நீக்க உத்தரவிடுவது அந்தக் கட்டுரையை எழுதுபவரின் பேச்சுரிமை மற்றும் செய்திகளை தெரிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மீறுவதாகும் என தெரிவித்தனர்.

மேலும், விதிவிலக்குக்கு உட்பட்ட சமயத்தில் மட்டுமே அனைத்து தரப்பினரையும் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பினரையும் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிப்பது மரண தண்டனைக்கு நிகரானது எனவும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தடை உத்தரவு வழங்கும் சமயத்தில், அவர்களின் பேச்சுரிமையை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் பதிவு செய்த கட்டுரையை நீக்க உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் வாதத்தைக் கேட்டு விரிவான உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

’SLAPP SUIT’ என்றால் என்ன?

பணம் படைத்த, செல்வாக்கு படைத்த நிறுவனங்கள் குறித்துப் பேசும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை தொடுப்பதற்கு பெயர் தான் ’SLAAP SUIT’. இது குறித்தான விழிப்புணர்வு அண்மைக்காலமாக தான் இந்தியாவில் அதிகரிக்கிறது.

நீதிமன்றங்களில் அதிகப்படியான வழக்குகள் தற்போது தான் வரத் தொடங்குகின்றன. செல்வாக்குப் படைத்த நிறுவனங்கள் குறித்து யாரும் பேசக் கூடாது என்ற நிலை ஏற்படும் தருவாயில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு அரணாக இருக்கும்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்