Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கெஜ்ரிவால் கைது; தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா, காங்., வங்கி கணக்குகள் முடக்கம் குறித்தும் பேச்சு

PRIYA28-03-2024
கெஜ்ரிவால் கைது; தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா, காங்., வங்கி கணக்குகள் முடக்கம் குறித்தும் பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்த அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், மீண்டும் தனது கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது.

டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியினரும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த கைது, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசியல் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கெஜ்ரிவாலின் கைது சர்வதேச அளவிலும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அறிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கெஜ்ரிவால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்கு விசாரணை நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன், சரியான காலத்தில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய அரசை அறிவுறுத்துவதாகக் கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க துணை தூதர் குலோரியாவை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது. இந்தியாவின் சட்டச் செயல்முறை, நோக்கம் மற்றும் நேரத்தில் நீதிகிடைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் செயல்படும் சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டது. அதன் மீது தாக்குதல் தொடுப்பது தேவையற்றது எனக் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், மார்ச் 27ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யூ மில்லர் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி பேசி உள்ளார்.

செய்தியாளர்கள் இந்தியா கண்டனம் தெரிவித்தது, இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மில்லர் கூறியதாவது -

கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸ் கட்சி கணக்குகள் முடக்கப்பட்டதையும் அமெரிக்கா கவனித்து வருகிறது. வரித்துறை அதிகாரிகள் வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாகவும், இதனால், நடைபெற உள்ள தேர்தலுக்கு தீவிரமாக பிரச்சாரம் நடத்த முடியாத சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்த இரு விவகாரங்களிலும் நேர்மையான, வெளிப்படையான, குறித்த காலத்தில் சட்ட நடவடிக்கையை மேற் கொள்ள வலியுறுத்துகிறோம்.

நாங்கள் கோருவது நேர்மையான, வெளிப்படையான நடவடிக்கையைத்தான். இதற்காக யாரும் கண்டனம் தெரிவிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்