Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

PRIYA28-03-2024
நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

இந்திய நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக இந்தியா முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

நீதித்துறையின் செயல்பாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அழுத்தம் தருவது, நீதிமன்ற முடிவுகளில் அதிகாரம் செலுத்துவது, அரசியல் செயல்திட்டங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலமாக நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது ஆகியவற்றைச் அதிகாரம் மிக்க கும்பல் செய்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் தொடர்பான வழக்குகளின் போது, இந்த கும்பலின் நோக்கம் துலக்கமாகத் தெரிவதாகக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் நீதித்துறையின் முடிவுகளை திசை திருப்பவும் நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

நீதித்துறையின் செயல்பாடுகளை தவறாக கட்டமைக்கும் நோக்கத்தில், இத்துறைக்கு பொற்காலம் இருந்தது போன்றும், அதோடு தற்போதைய நீதித்துறையின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பல கட்டுக்கதைகளை உருவாக்கி விடுவது, முக்கியமான உத்தியாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். நீதித்துறையின் உத்தரவுகள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கவும் இது போன்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்படுவதிலும் இந்த குழு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. நீதிபதிகளின் நேர்மையின் மீது இவர்கள் தங்கள் விருப்ப பிம்பங்களை கட்டமைப்பதாகவும் தங்கள் கவலையை வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இது போன்ற செயல்பாடுகள் சட்ட விதிகளையும் நீதித்துறையின் கொள்கைகளையும் அவமதிப்பது மட்டும் அல்லாமல், சேதப்படுத்தவும் செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் சட்டத்தின் ஆட்சி நடத்தப்படாத நாடுகளில் நடக்கும் செயல்பாடுகளை ஒப்பிட்டு, நமது நீதித்துறை மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் நீதித்துறையின் மீதான விமர்சனங்கள் மட்டும் அல்ல, நமது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் தாக்குதலாகும். மேலும், நமது நியாயமான சட்ட செயல்முறைகளை இது அச்சுறுத்துகிறது என கடிதத்தில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிப்புற அழுத்தங்களில் இருந்து நீதித்துறை பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்