Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

எதிர்கட்சிகளுக்கு மட்டும் ’நோ’.. சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சனை காட்டுகிறதா?

LENIN DEVARAJAN28-03-2024
எதிர்கட்சிகளுக்கு மட்டும் ’நோ’.. சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சனை காட்டுகிறதா?

தேர்தல் ஆணையத்தில் பாஜகவின் அரசியல் இருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் ஓரவஞ்சனை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பின்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சதி இருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ’இண்டியா’ கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் விசிக ஆகியோர் தங்களுக்கு 'பம்பரம்' மற்றும் 'பானை' சின்னம் ஒதுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவினை தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையமோ அதனை பல நாட்கள் கிடப்பில் போட்டது. இதற்கு எதிராக மதிமுக மற்றும் விசிக நீதிமன்றத்தை நாடியது.

மதிமுகவுக்கு 'பம்பரம்' சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று மதிமுகவுக்கு 'பம்பரம்' சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பொதுப்பட்டியலில் இல்லாத ’பம்பரம்’ சின்னத்தை ஒதுக்க முடியாது எனவும், அப்படி ஒதுக்கினால் தவறான உதாரணமாகும் என்ற எலக்ஷன் கமிஷனின் விளக்கம் மதிமுகவினரை சூடேற்றியது. மேலும், கடந்த 2010-ம் ஆண்டே மதிமுக அதன் அங்கீகாரத்தை இழந்துவிட்டதாகவும் விளக்கமளித்தது.

கடந்த மக்களவை தேர்தலில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட ’பானை’ சின்னம் இப்போது ஏன் ஒதுக்கவில்லை? என தேர்தல் ஆணையத்தை நோக்கு விசிகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் அதன் ’டார்ச் லைட்’ சின்னத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் உள்ள கட்சிகளான அ.ம.மு.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு ’குக்கர்’ மற்றும் ’சைக்கிள்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க. மற்றும் த.மா.கா. ஆகியோர் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு ’குக்கர்’ மற்றும் ’சைக்கிள்’ சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், எதிர்கட்சிகள் கோரும் சின்னத்தை ஒதுக்காமல், ஓரவஞ்சனை காட்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். சின்னம் தொடர்பான சிக்கல் எதுவும் வரக்கூடாது என்பதற்காகவே அ.ம.மு.க. மற்றும் த.மா.கா-க்கு பாஜக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியானால், விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறதே அவர்களுக்கு ஏன் ’பானை’ சின்னம் ஒதுக்கவில்லை? என்று கேட்டால் அவர்கள் பாஜக கூட்டணியில் இல்லையே என்று விமர்சனம் கலந்த நகைச்சுவையோடு கமெண்ட் செய்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீட்டில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நீதியும், எதிர்க்கட்சிகளுக்கு ஒது நீதி இருப்பதாகவும், இதனால், இந்தியவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகிறது. அதேபோல், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தில் பாஜகவின் அரசியல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

7% வாக்குகள் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்க, அதே சின்னத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு அவசர கதியில் ஒதுக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு இன்று வரை முறையான பதில் இல்லை என நாதகவினர் குமுறுகிறார்கள்.

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு நாங்கள் ’கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம். நாங்கள் முறைப்படி 11 மாநிலங்களில் இந்த சின்னத்தை கேட்டு முன்கூட்டியே விண்ணப்பித்த காரணத்தால்தான் எங்களுக்கு அது கிடைத்தததாக பா.ம.ஐ.க நிர்வாகி ஒருவர் கூறியது நாதகவினருக்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சதி இருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவரின் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்